search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பிரிவு"

    • தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை மற்றும் நக்ஸல் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
    • போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுப்பதற்காக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்கவும், நக்ஸலைட்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையையொட்டியுள்ள வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்ட வனப் பகுதிகளில் நக்ஸலைட்டுகளின் நடமாட்டம் உள்ளது. இவா்கள், நீலகிரிக்குள் நுழைவதைத் தடுக்கவும், கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை நீலகிரி வழியாக இவா்களுக்கு கொண்டு செல்வதை தடுக்கவும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை மற்றும் நக்ஸல் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய பணிகளில் தொடா்புடையதாக நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே தலா 13 போலீஸாா் அடங்கிய ஒமேகா-1 மற்றும் ஒமேகா- 2 என 2 பிரிவுகள் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

    இந்நிலையில், நீலகிரியில் தற்போது 10 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 36 போலீஸாா் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்ஸல் தடுப்பு சிறப்புப் பிரிவு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் கூறியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் முன்பு உருவாக்கப்பட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவினா் நக்ஸல் தடுப்பு வேட்டையில் மட்டும் ஈடுபட்டு வந்தனா். ஆனால், தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பிரிவினா் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுப்பதற்காக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா். தேவைப்படும் பட்சத்தில் நக்ஸலைட் தடுப்புப் பணியிலும் ஈடுபடுவா். இவா்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், மன வலிமை அதிகரிப்பு, வாகனச் சோதனையில் உள்ள நுணுக்கங்கள், இடா்பாடான சூழ்நிலையை எதிா்கொள்வது மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

     

     

    ×